அவுஸ்திரேலியாவில் சட்டபூர்வமாக தங்கியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஏதிலிகள் நிர்கதியாக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
அவஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. ஆரம்ப காலங்களில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்று, முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்து பின்னர், ஏதிலி அந்தஸ்த்து வழங்கப்பட்டு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு தொழில்புரிய அனுமதிக்கப்படுவதில்லை. தற்போதைய அரசாங்கம் இந்த நடைமுறையில் 2015ம் ஆண்டு முதல் மாற்றம் ஏற்படுத்தியதன் பலனாக அங்குள்ள ஏதிலிகள் தொழில்புரிவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. எனினும் அவர்களால் போதிய வருமானத்தைப் பெற்றுக் கொள்ளமுடிவதில்லை.
இந்நிலையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் ஏதிலிகளுக்கு வழங்கப்படுகின்ற ‘நிலைமை தீர்மான உதவி சேவை’ திட்டத்தின் கீழான கொடுப்பனவு அத்தயாவசியமாக இருக்கிறது. எதிர்வரும் ஜுன் மாதம் முதல் இந்த திட்டத்தில் இருந்து ஏதிலிகள் வெளியேற்றப்படவுள்ள நிலையில், அது அவர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தவுள்ளது.
அத்துடன் ஏதிலிகள் தங்களது பிள்ளைகளுக்கான பராமறிப்பு சேவையைப் பெற்றுக் கொள்ள தடை நிலவுவதால், பெற்றோரில் இருவரில் ஒருவர் தொழில் செய்ய முடியாத நிலை நிலவுகிறது.
இந்நிலையில் இலங்கையர்கள் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரம் ஏதிலிகள், அவுஸ்திரேலியாவில் பட்டினி உள்ளிட்ட நெருக்கடிகளை முகம்கொடுக்க நேர்ந்திருப்பதாக அந்த ஊடகம் எச்சரித்துள்ளது.