இலங்கையில் இதுவரை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று மேற்கொள்ளப்பட்டது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இந்த ஆர்ப்பாட்டப் பேரணியினை ஏற்பாடு செய்திருந்தன. வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட பல இடங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டிருந்தனர். மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன் மட்டக்களப்பு மாநகர மேயர் ரி.சரவணபவன் உட்பட மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன், பேரணியின் இறுதியில் ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி கையொப்பங்களும் பெறப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.