இலங்கையில் 3 ஆயிரத்து 148 பாடசாலைகள், 10ற்கும் குறைவான ஆசிரியர்களுடன் இயங்கி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் 2017ம் ஆண்டறிக்கையில் இது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலைகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் போதாமையை இது எடுத்துக்காட்டுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 13 ஆண்டுகால கட்டாய கல்வி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசங்கம் மேற்கொண்டுள்ள போதும், பாடசாலைகளுக்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாமை கல்வித்துறை வீழ்ச்சியில் தாக்கம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், கடந்த ஆண்டு, 43 லட்சம் மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டுள்ள அதேவேளை, ஆறு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு பாதணிகளும் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், உலக உணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கும் திட்டம், வட மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டதன் மூலம் அந்த மாகாணத்தை சேர்ந்த 1லட்சத்து 59ஆயிரத்து 792 மாணவர்கள் பயன் அடைந்துள்ளதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.