மட்டக்களப்பு, காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பஸ் குருநாகல்-வந்துராகல பகுதியில் வைத்து எரிபொருள் ஏற்றி வந்த வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 25 பயணிகள் காயமடைந்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்துச் சம்பவம் நேற்று (30.04.2018) இரவு 11:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். எரிபொருள் வாகனத்துடன் மோதுண்டு விபத்திற்குள்ளான பஸ் சேதடைந்துள்ள போதும் பஸ்ஸ{ம் எரிபொருள் ஏற்றிவந்த பவுஸரும் தீப்பிடிக்காமையால் மக்கள் பெரும் அனர்த்தத்திலிருந்து காப்பாற்றப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கட்டுகஸ்தோட்டை – குருநாகல் வீதியில், கலகெதர – மடவல பகுதியில் நேற்று இடம்பெற்ற யாத்திரிகள் பயணித்த பஸ் விபத்தில் 32 பேர் காயமடைந்து கலகெதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 15 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென்றும் அவர்கள் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.