ஹபராதுவ – தலவெல்ல கடற்கரை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத கட்டட நிர்மாணப் பணிகள் தொடர்பில், நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்த பெக்கோ இயந்திரத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த நபர் தலவெல்ல பிரதேசத்தில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றை நடத்தி வருவதோடு, ஹோட்டலின் பின்புறத்தில் கடற்கரையை ஆக்கிரமித்து ஹோட்டலை விரிவுபடுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் கடலோர பாதுகாப்பு திணைக்களத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸாரின் உதவியை கடலோர பாதுகாப்புத் திணைக்களம் நாடியிருந்த நிலையில், நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அவுஸ்திரேலியப் பிரஜை, கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வருகைத்தந்ததோடு, அவர் அடிக்கடி அவுஸ்திரேலியாவுக்கு சென்று வருகின்றமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.