வவுனியா புதுக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் ஆசிரியரை தாக்க முற்பட்ட மாணவனை நேற்று ஈச்சங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புதுக்குளம் பிரபல பாடசாலையில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் 19 வயதுடைய மாணவன் கடந்த சில நாட்களாக பாடசாலைக்கு சமூகமளிக்காததையடுத்தே குறித்த மாணவனின் வகுப்பாசிரியர் மாணவனின் தந்தைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை வீட்டுக்கு சென்று குறித்த பாடசாலை மாணவனை தாக்கியுள்ளார். தந்தையின் தாக்குதலினால் கோபமுற்ற மாணவன் நேற்றையதினம் பாடசாலைக்கு சென்று ஆசிரியரை தாக்க முயற்பட்டபோது, உடனடியாக பாடசாலையின் அதிபர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் மாணவனை கைதுசெய்து விளக்கமறியலில் வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.