கடந்த ஏப்ரல் மாதத்தில் மாத்திரம்,பொலிஸாருக்கு எதிராக மோட்டார் சைக்கிள் சாரதிகளினால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தங்களிடம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் சைக்கிள் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

மோட்டார் சைக்களில் அதன் சாரதிகளால், மாற்றம் செய்யப்பட்ட சைலன்சர்களை பொலிஸார் அகற்ற உத்தரவிடுவது தொடர்பான முறைப்பாடுகளே அதிகம் கிடக்கப்பெற்றுள்ளது எனவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் சாரதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில், முறைப்பாடுகளை தமக்கு தெரியப்படுத்த வேண்டும் என அவசர தொலைப்பேசி இலக்க சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் சங்கத்தின் தலைவர், சிராந்த அமரசிங்க, இந்த தொலைப்பேசி இலக்கத்தினூடாக கடந்த மாதத்தில் 1083 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு கருதி மோட்டார் சைக்கிளில் பொருத்தப்படும் கூடுதல் மின்விளக்கு உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் பல்வேறு காரணங்களுக்காக அகற்ற உத்தரவிடுகிறார்கள். ஆகவே இதுதொடர்பில் தங்களுக்கு அறியத்தர வேண்டும் என்பதற்காகவே அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மோட்டார் சைக்களில் மாற்றம் செய்யப்படும் சைலன்ஸர் ஒலிகள் அதிக ஒலியெழுப்புவதால் சாலையில் செல்லும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.