கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மூடப்பட்டாலும், பேஸ்புக் தரவுகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்த விசாரணை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் அரசியல் ஆலோசனை நிறுவனம் வணிக இழப்பு காரணமாக மூடப்பட்டது. அரசியல் கட்சிகள் சார்பில், இந்நிறுவனம் முறைகேடாக பயன்பாட்டாளர்களின் தகவல்களை பெற்றதாக கூறப்பட்டது. பல்வேறு செயலிகளின் மூலம் 87 மில்லியன் பயன்பாட்டாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் தவறாக பயன்படுத்தியது என சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டது. இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.

“பயன்பாட்டாளர்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்து புரிந்து கொள்வதில் உறுதியாக உள்ளோம். இது மீண்டும் நடக்காமல் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துவோம்” என்று அதன் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 2016 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் மற்றும் பிரிட்டனின் ப்ரெக்ஸிட் விவகாரங்களின் முடிவுகளை திசைதிருப்ப மில்லயன் கணக்கான பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தரவுகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக இந்நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

எனினும் இதனை மறுக்கும் அனாலிடிகா நிறுவனம், இத்தாலி, கென்யா, நைஜீரியா போன்ற நாடுகளின் தேர்தல் பிரச்சாரங்களிலும் தலையிட்டதாக பல பதிவுகள் கூறுகின்றன. இது குறித்து கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் க்ளாரன்ஸ் மிட்சல், அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டி உரையாற்றியுள்ளார். “கடந்த பல மாதங்களாக எங்கள் நிறுவனத்தின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

இதனை சரி செய்ய முயற்சித்த போதிலும், அவதூறு கூறப்பட்டது” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவன ஊழியர்கள் நியாயமாகவும் சட்டப்பூர்வமாகவும் நடந்து கொண்டதாக நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், ஊடகங்கள் பல்வேறு தரப்பட்ட செய்திகளை வெளியிட்டதில் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை இழந்துவிட்டோம்.” “இதன் விளைவாக, எங்கள் தொழிலை தொடர்வது சாத்தியமற்றது என்று தீர்மானிக்கப்பட்டது” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. (பீபீசி)