மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழையில் யுவதி ஒருவர் கடன் தொல்லை காரணமாக தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை நண்பகல் வேளை சிவன் கோயில் வீதி பேத்தாழையில் இடம்பெற்றுள்ளது. பஞ்சாட்சரவடிவேல் நோஜிதா (வயது 23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தமது பெற்றோர்கள் அரேபிய நாட்டிற்கு தொழில் வாய்ப்பு தேடிச் சென்றுள்ளதினால் சகோதரர்களுடன் குறித்த யுவதி வாழ்ந்து வந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற தினமன்று நுன்கடன் வழங்கும் நிறுவனமொன்றிக்கு நிலுவைப் பணம் செலுத்த வேண்டிய தேவை இருந்துள்ளது. வழக்கம் போல் மதிய உணவினை அன்றைய தினம் தயாரித்த பின்னர் வெளியில் சென்ற சகோதரர் வீடு திரும்ப நேரமாகியதினால் உணவு உண்ண வருமாறு கைத்தொலைபேசி மூலம் குறுந்தகவல் அனுப்பிவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சகோதரர் வீடு வந்து பார்த்த போது தமது இளைய சகோதரர்கள் வீட்டின் ஜன்னல் ஊடாக பார்வையிட்டு அழுது கூச்சலிட்டதைக் கண்டு பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட கதவினை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தமது சகோதரி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளதாக கல்குடா பொலிசாரின் முறைப்பாட்டில் தமது வாக்குமூலத்தினை பதிவு செய்துள்ளார்.

அவரை காப்பாற்றும் முகமாக அயலவர்களின் உதவியுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு முச்சக்கரவண்டியில் கொண்டு சென்றபோதும் இடைவழியில் உயிரிழந்துள்ளதாக சகோதரர்கள் தெரிவித்தனர்.

தமது சகோதரர் ஒருவருக்கு உடலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்வதற்கும் வேறு தேவைகளுக்காகவும் அதிகளவு பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் தமது தாயார் பல நுன் கடன் நிறுவனங்கள் மற்றும் வெளி நபர்களிடம் தனது பெயரிலும் உயிரிழந்த குறித்த யுவதியின் பெயரிலும் பணத்தினை கடனாகப் பெற்று மருத்துவ சிகிச்சைக்கு அதனை பயன்படுத்தியுள்ளார்.

மேற்படி கடன் விடயங்களுக்கு தமது மகளை பொறுப்பாளியாக்கி விட்டு கடன் சுமையினை நிவர்த்தி செய்ய அவர் அரேபிய நாட்டிற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து தமது தந்தையும் சென்றுள்ளார். இவ்வாறான நிலையில் கடன் வழங்கிய நிறுவன உத்தியோகஸ்த்தர்கள் சிலர் வீட்டிற்கு அடிக்கடி வந்து பண நிலுவையினை செலுத்துமாறு தகாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியுள்ளனர்.

இந்நிலைமை காரணமாக குறித்த சில மாதங்களாக அவர் மனமுடைந்து அச்சமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தமது தந்தை எதிர்வரும் 5 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாகவும் நாடு திரும்பியதும் தாங்கள் வசித்து வரும் வீட்டினை விற்று விட்டு கடன் நிலுவையினை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தந்தை மகளுக்கு தொலைபேசியூடாக சில நாட்களுக்கு முன்பு அறிவுரை வழங்கியதாக சம்பவத்தினை கேள்வியுற்ற அவரது நெருங்கிய உறவினர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறான நிலையில் மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை பிரதேசத்தில் ஆழ்ந்த சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு சட்ட வைத்தியரின் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இன்றுகொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேற்படி சம்பவம் தொடர்பாக கல்குடா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.