முல்லைத்தீவு மாங்குளம் 574 ஆவது படைப்பிரிவு முகாம் அமைந்துள்ள காணியை இராணுவத்தினருக்கு சுவீகரிப்பதுக்காக அளவீடு செய்யும் பணிகள் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு 574 ஆவது படைப்பிரிவு முகாம், மக்களின் காணிகளில் அமைந்துள்ளது. இந்த காணிகளை விடுவிக்குமாறு பலதடவைகள் மக்கள் கோரியும் இந்த காணிகள் இராணுவத்தால் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று நில அளவை திணைக்கள அதிகாரிகள் குறித்த காணியை அளவீடு செய்ய சென்றபோது, மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து இராணுவ முகாம் வாசலில் வைத்து நில அளவீட்டு பணிக்காக சென்ற அதிகாரிகளை திருப்பியனுப்பியுள்ளனர்.

இந்த காணி உரிமையாளர்களான தமக்கு யாருக்கும் அறிவிக்கவில்லை எனவும், இரகசியமான முறையில் அளவீடு செய்து இராணுவத்துக்கு வழங்கும் சதி திட்டமாக இதை பார்ப்பதாகவும், எல்லைப்படுத்தல் நடவடிக்கைக்காக காணிகளை அளவிடுவதாயின் உரிமையாளர்களான தங்களையும் அழைத்து எந்த காணிகளை அளவீடு செய்து தமது காணிகளை தம்மிடம் தருமாறும் மக்கள் இதன்போது தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.