கிழக்கிலிருந்து வடக்கையும், தெற்கையும் இணைக்கும் வகையில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கான முயற்சிகளை செய்யவுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று காலை உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். வரவு – செலவு திட்டத்தில் மூலம் 40 வீதமான நிதி ஒதுக்கீடுகள் இந்த அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அத்துடன், நாட்டின் அபிவிருத்தியுடன் தொடர்புபட்ட அமைச்சு என்பதால் இதன் ஊடாக கிழக்கு மாகாண அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்தவுள்ளேன்.

கிழக்கு மாகாணத்தில் இதுவரை நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவில்லை. கிழக்கையும், தெற்கையும், கிழக்கையும், வடக்கையும் இணைக்கும் வகையில் நெடுஞ்சாலையொன்று அமைக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான நிதியினை சர்வதேசத்தின் உதவியோடு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.