ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு கல்கிசை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று குறித்த வழக்கு விசாரணை கல்கிசை நீதிமன்றத்தின், நீதிபதி லோசன அபேவிக்கிரம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதுஅவர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் சட்டத்தரணிகள், போர்க்காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதால், அவரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது, குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அமைச்சர், சரத் பொன்சேகாவிடம் ஏற்கனவே விசாரணை செய்யப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஆனால், சரத் பொன்சேகாவிடம், முறைப்படி விசாரணை செய்ய வேண்டும் என குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, சரத் பொன்சேகாவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்ட நீதிபதி, தேவைப்பட்டால் அடுத்த விசாரணையின் போது, அதனை சுருக்கமாக வெளிப்படுத்த தயார் நிலையில் இருக்குமாறும் உத்தரவிட்டார்.

அதேவேளை இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை எதிர்வரும் 16ஆம் திகதி வரையில், விளக்கமறியலில் வைக்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.