பிராந்திய ரீதியாக பாரிய அச்சுறுத்தலாக உள்ள போதைப்பொருள் கடத்தல்களை தடுப்பதற்கு தேவையான தொழில்நுட்ப உதவியை பெற்றுத் தருமாறும் ஜனாதிபதி, ஜப்பானிய பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜப்பானிய பிரதமர் சின்சோ அபேயின் விசேட ஆலோசகர் ஹிரோடோ இஸ{மி உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். இதன் போதே ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மின்சார நெருக்கடியை தவிர்ப்பதற்காக முன்னெடுக்கப்படும் சக்திவள திட்டங்களுக்கான நடவடிக்கைகளை விரைவாக நிறைவு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து ஜப்பான் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி சுட்டிகக்காட்டியுள்ளார்.

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் திருகோணமலை துறைமுக அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், கிழக்கு மாகாண உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக உதவிகளை வழங்குமாறும் ஜப்பான் தூதுக்குழுவிடம் ஜனாதிபதி கோரியுள்ளார்.

இதேநேரம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்த அனைத்து திட்டங்களையும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜப்பான் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.