சர்வதேச இறப்பர் மாநாடு இன்றும் நாளையும் கொழும்பில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் வழிகாட்டல் மற்றும் அமைச்சரின் தலைமையில் குறித்த மாநாடு நடைபெறவுள்ளது. 36 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். உலகின் இறப்பர் துறையில் இறப்பர் கேந்திர நிலையமாக இலங்கை எதிர்காலத்தில் திகழும் என்பதினால் இந்த மாநாடு சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பெருந்தோட்டத்துறை அமைச்சின் ஆலோசகர் லக்ன பரனவிதான சர்வதேச இறப்பர் ஆய்வு மாநாடு தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த மாநாடு இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாகும். நாட்டில் பாரிய அளவில் இறப்பரை உற்பத்தி செய்வோருக்கு இது சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்று ஆலோசகர் லக்ன பரனவிதான குறிப்பிட்டார். இறப்பருக்கு சிறந்த விலையைப் போன்று சிறந்த வர்த்தக சந்தையும் அடையாளம் காண்பதற்கு இந்த மாநாட்டின் மூலம் சந்தர்ப்பம் கிடைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிலையான அபிவிருத்திக்கான தடைகளை வெற்றி கொள்வதே இதன் தொனிப்பொருளாகும் என பெருந்தோட்டத்துறை ஆலோசகர் லக்ன பரனவிதான மேலும் குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறான ஒரு மாநாட்டை இலங்கையில் நடத்துவது மிகவும் விசேடமாகும்.

இதில் உலகில் இறப்பர் தயாரிப்பாளர்கள், இறப்பர் உற்பத்தியாளர்களைக் கொண்ட நாடுகளின் அரச நிறுவனங்கள், பிரதிநிதிகள், இறப்பரை விநியோகிப்போர், நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 400 பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருப்பதாகவும் பெருந்தோட்டத்துறை ஆலோசகர் லக்ன பரனவிதான கூறினார்.