சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மட்டக்களப்பு, செங்கலடி, மாவடிவேம்பில் இன்று நடைபெற்றது.

தேசிய ஐக்கியத்திற்கு தொழிலாளரின் சக்தி எனும் தொனிபொருளில் நடைபெற்ற இந்த மே தின கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றினார். ஜனாதிபதி தனது உரையின்போது, கடந்த 3 வருட காலப்பகுதிக்குள் எமது அரசாங்கம் இலங்கையில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.மேலும், தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த தொழிற்சங்கங்களுக்கு பெரும் பங்களிப்பு உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். யுத்த அனுபவத்துடன் மறுபடியும் ஒரு யுத்தம் வராத விதத்தில் நாம் செயற்பட வேண்டும், யுத்தத்தினால் அல்லது ஆயுதங்களால் எந்த ஒரு பிரச்சினைகளையும் முடிவுக்கு கொண்டுவர முடியாது. அந்த பிரச்சினைகளை மனிதாபிமானத்தால் மட்டுமே முடிவுக்கு கொண்டுவருவது தான் ஒரு வளர்ச்சியடைந்த சமூகத்தின் பண்பாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதிகாரம் இல்லாதவர்கள் எந்த ஒரு கருத்தையும் எந்த நேரத்திலும் தெரிவிக்க முடியும். சிலர் 2020 ஆம் ஆண்டில் நீங்கள் ஓய்வுபெற போகின்றீர்களா? என கேட்கிறார்கள். சமூக வலைத்தளங்களிலும் கூட நான் 2020 ஆம் ஆண்டில் ஓய்வுபெற போவதாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார்கள்.

ஆனால் நான் 2020 ஆம் ஆண்டில் ஓய்வுபெற மாட்டேன், நாட்டிற்காக நான் செய்ய வேண்டிய கடமைகள் இன்னும் அதிகமாக உள்ளது, 2020ஆம் ஆண்டில் ஆட்சியமைக்க சிலர் கனவு காண்கிறார்கள். எமது கட்சியில் உள்ள உறுப்பினர்கள் சிலர் கூட 2020 தொடர்பில் உரையாடுகின்றார்கள். ஆனால் இவ்வாறு கனவு காண்பவர்களுக்கு மக்கள் தொடர்பில் எவ்வித கவலையும் இல்லை என ஜனாதிபதி தனது மே தின உரையின்போது குறிப்பிட்டார். 

இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்ரசின் 79 வது மே தின நிகழ்வு இன்று காலை 11மணிக்கு இ.தொ.கா.வின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது இ.தொ.கா.வின் மே தின பேரணியானது நுவரெலியா சினிசிட்டா நகரசபை மண்டபத்தின் அருகாமையில் ஆரம்பிக்கபட்டது. குறித்த பேரணி நுவரெலியா அஞ்சல் நிலையம் வரை இடம்பெற்றதுடன், ஏனைய இரண்டு பேரணிகளில் ஒன்று நுவரெலியா வியாபார மத்திய நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அடுத்த பேரணி நுவரெலியா ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த மூன்று பேரணிகளும் நுவரெலியா அஞ்சல் நிலையத்திற்கு அருகில் ஒன்றிணைந்து நுவரெலியா வாகன தரிப்பிடத்தில் அமைக்கபட்டுள்ள பிரதான மேடையை வந்தடைந்தது. இந்த இ.தொ.கா.வின் மே தின பேரணியில் இ.தொ.கா. தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான், சமுக நலன்புரி ஆரம்ப கைதொழில் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், மத்திய மத்திய மாகாண இந்து கலாசார தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், பிலிப்குமார் , சக்திவேல், பிரதேச சபையின் தவிசாளர்கள் மற்றும் பெருந்திரளான ஆதரவாளர்களும் கலந்த கொண்டிருந்தனர்.

இதேவேளை தமிழ் முற்போக்கு கூட்டணியின் மே தினப் பேரணியும் கூட்டமும் தலவாகக்லை நகரில் இன்று நடைபெற்றது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அரச கருமமொழிகள் அமைச்சருமான மனோ கணேசன், தமிழ் முற்போக்கு கூட்ணியின் பிரதித் தலைவர்களான மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமாகிய இராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற மே தினக் கூட்டமானது தலவாகலை பஸ் தரிப்பித்திலிருந்து பேரணியாக வந்து தலவாக்கலை நகர மைதானத்தை சென்றடைந்து. பின்னர் அங்கு மே தின கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்றது.

இந்நிகழ்வில் நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், மத்திய மாகாண சபை உறுப்பினர்களாகிய ஸ்ரீதரன், ராஜாராம், ராம் சிங் பொண்ணையா, சரஸ்வதி சிவகுரு, உதயகுமார், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், மலையக மக்கள் முன்னனியின் பொதுச் செயலாளர் அ.லோரண்ஸ், முற்போக்கு கூட்ணியின் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அத்துடன், ஜனநாயக மக்கள் முன்னணி ஏற்பாட்டில், கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் மே தின ஊர்வலமும், கூட்டமும் அமைச்சர் மனோ கணேசனின் தலைமையில் நடைபெற்றது.

மேலும், ஒன்றிணைந்த எதிரணி உள்ளிட்ட சிறீலங்கா பொதுஜன முன்னணியின் மே தினக் கூட்டம் காலி சமனல மைதானத்தில் இடம்பெற்றது. மக்கள் விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டம் கொழும்பு பி.ஆர்.சி மைதானத்தில் நடைபெற்றது.