வவுனியா இராசேந்திரன்குளம் விக்ஸ்காடு பகுதிக்குரிய விளையாட்டு மைதானத்திற்கு என ஒதுக்கப்பட்ட ஒன்றரை எக்கர் காணியினை இன்று காலை அப்பகுதியிலுள்ள வேறு ஒரு பிரிவினர் அபகரிக்க முற்பட்டபோது அதனை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கிராம அபிவிருத்திச்சங்கம் மேலும் தெரிவித்ததாவது, பாரதிபுரம், இராசேந்திரகுளம் விக்ஸ்காட்டு பகுதிக்குரிய விளையாட்டு மைதானத்திற்கு என ஒதுக்கப்பட்ட ஒன்றரை ஏக்கர் காணியினை இன்று காலை 6மணியளவில் அப்பகுதியிலுள்ள வேற்று இனத்தவர்கள், சமயத்தலைவர் தலைமையில் சென்ற குழுவினர் அபகரிக்கும் நோக்குடன் டோசரை எடுத்து அப்பகுதியை சுத்தப்படுத்த முற்பட்டபோது இராசேந்திரகுளம் பகுதியிலுள்ள கிராமத்தவர்கள் அதனை தடுத்து நிறுத்தியதுடன் அப்பகுதி இராசேந்திரகுளம் விளையாட்டு மைதானத்திற்குரிய பகுதி என வவுனியா பிரதேச செயலகத்தினால் கடந்த 2007ஆம் ஆண்டு உறுதிப்படுத்தப்பட்டு வழங்கப்பட்ட ஆவணங்களை காண்பித்துள்ளனர். இதையடுத்தும் அவர்கள் அங்கிருந்து செல்லவில்லை.

இச்சம்பவம் குறித்து நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கப்பட்டது இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் இரு தரப்பினரையும் சமாதனப்படுத்தியதுடன் காணி அபகரிக்கும் நோக்கில் சென்றவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது அவர்களிடம் எவ்வித ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

விளையாட்டு மைதானத்திற்கு ஒதுக்கப்பட்ட காணி என்பதை இனங்கண்ட பொலிஸார் பதட்டத்தினை ஏற்படுத்திய இருபகுதியினரையும் அவ்விடத்திலிருந்து வெளியேற்றியதுடன் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.