செர்பியா நாட்டின் முதலாவது பிரதி பிரதமரும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சருமான இவிக்கா டெசிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு அலரிமாளிகையில் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்குமிடையில் பல்வேறு துறைகளில் நல்லுறவை மேம்படுத்துவது குறித்து இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது செர்பியா வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், அணிசேரா நாடு என்ற ரீதியில் இலங்கையுடன் முன்னாள் யுகோசிலாவியாவின் தலைவர் மார்சல் ரிட்டோவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் குறித்து இதன்போது குறிப்பிட்டார்.

முன்னாள் யுகோசிலாவிய நாடான செர்பியா இந்த உறவுகளை இலங்கையுடன் தொடர்ந்து முன்னெடுக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கிடையில் உள்ள உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது கருத்துக்களை முன்வைத்தார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள வெளிநாட்டமைச்சர் அரசாங்கத்தின் உயரதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.