உலகின் முக்கிய 5 நாடுகளில் இலங்கை தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் பதவிகள் கடந்த சில மாதங்களாக வெற்றிடமாக காணப்படுவதாக தகவல் பதிவாகியுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு அமைய, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, பிறேசில் மற்றும் கென்யா ஆகிய நாடுகளுக்கான தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் பதவிகள் வெற்றிடமாகவுள்ளன. இலங்கையின் அரசியல் பொருளாதாரம் மற்றும் வெளிவிவகார பிரிவுகளின் செயற்பாடுகளுக்கு மிக முக்கிய நாடாக கருதப்படும். ஐக்கிய அமெரிக்காவின் இலங்கை தூதுவர் பதவி கடந்த 9 மாதங்களாக வெற்றிடமாகவுள்ளது. முன்னாள் தூதுவர் பிரசாத் காரியவசம், வெளிவிவகார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டது முதல், தூதுவர் பதவி வெற்றிடமாகவுள்ளது. இலங்கையுடன் நீண்ட கால தூதரக உறவுகளை பேணும் நாடாக பிரித்தானியா விளங்குகின்றது.

எனினும், கடந்த பெப்ரவரி மாதம் முதல் பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவி, வெற்றிடமாகவுள்ளது. இறுதியாக அமரி விஜேவர்தன சேவையாற்றினார். கடந்த மார்ச் மாதம் முதல் ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவருக்கான வெற்றிடம் நிலவுகின்றது. ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவராக டொக்டர் சமன் வீரசிங்க இறுதியாக செயற்பட்டிருந்தார்.

அத்துடன், பிறேசில் மற்றும் கென்யா ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவர் பதவிகளுக்கு வெற்றிடம் நிலவுகின்றது. உலகின் பலம்வாய்ந்த நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் ஊடாக இலங்கைக்கு அந்நிய செலவாணி கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.