அரசுக்கும் பிரஜைகளுக்குமிடையில் சிறந்த உறவை பேணவதற்கும் அரசாங்க மற்றும் அரச நிறுவனங்களின் பொறுப்புக் கூறல் தன்மையை உறுதிப்படுத்துவதற்குமான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான சர்வதேச மாநாடு இன்று கொழும்பில் அமைந்துள்ள கொள்கை ஆய்வு நிலையத்தில் இடம்பெற்றது.

இலங்கையில் தகவலறியும் உரிமைச் சட்ட மூலம் அமுல்படுத்தப்பட்டு ஒரு வருட கால நிறைவினை முன்னிட்டு இம் மாநாட்டினை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் நோர்வே தூதுவராலயம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்ததுடன், நோர்வே, இந்தியா, மெக்சிகோ, பங்களாதேஷ், மியன்மார் பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட ஏழு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இரண்டு நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம் மாநாட்டில் இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளிலும் தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான நடைமுறைத் தன்மை குறித்தும், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நாட்டு பிரஜைகளுக்கு காணப்படும் உரிமைகளின் ஸ்திரத்தன்மை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

தகவல் தேடுவோரின் பாதுகாப்பு ஆபத்து, தனிப்பட்ட தரவுகளை பாதுகாத்தல், ஊடகம் சிவில் சமூக அமைப்புகளின் வகிபாகம், எதிர்காலத்தில் தகவலறியும் உரிமைச் சட்டம் மற்றும் தகவல் வெளிப்படுத்தல் நுணுக்கங்கள் எனும் தலைப்புக்களின் விரிவுரைகள் என்பன வழங்கப்பட்டிருந்தமையயும் குறிப்பிடத்தக்கது.