மாகாண சபைகள் தேர்தல் தொகுதி எல்லை மீள்நிர்ணய குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கஃபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பின் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். மாகாண சபைகளது தேர்தல் தொகுதி எல்லைகளை மீள்நிர்ணயம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, அந்த பணிகளை 4 மாதங்களில் நிறைவு செய்து, அதன் அறிக்கையை விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரிடம் கையளித்துள்ளது. இந்த அறிக்கை நாடாளுமன்றத்திடம் வழங்கப்பட்டுள்ள போதும், இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் தேர்தல் நடத்தப்படுவது மேலும் தாமதாகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் கட்சித் தலைவர் கூட்டத்தில் இது குறித்த தீர்மானத்தை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த எல்லைமீள்நிர்ணய அறிக்கையானது, சிறுபான்மை கட்சிகளது அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கச் செய்யும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மை கட்சிகள் கரிசனை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.