முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலிடம் இருந்து வாக்குமூலத்தை பெற நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் முன்வைத்த வேண்டுகோளை கருத்திற்கொண்டு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இந்த அனுமதியை வழங்கியுள்ளார். அத்துடன் அவரது வங்கி கணக்குகளை பரிசோதனை செய்யவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்காக நிறுவப்பட்ட நிறுவனம் ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிதி மோசடி குறித்து நடத்தப்பட்டுவரும் விசாரணைகள் தொடர்பில் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

சுமார் 600 மில்லியன் ரூபாய் நிதி மோசடி தொடர்பில் இந்த விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டி 2018 ஆம் ஆண்டு நடத்த முடியாமல் போனதால் இந்த நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் பீ அறிக்கையொன்றின் மூலம் நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.