வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் தந்தையின் ஹயஸ் ரக வானுடன் மோதுண்டு 5 வயது மகள் பலியாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுகந்தன் துசாந்தினி என்ற சிறுமியே இவ்வாறு பலியாகியுள்ளார்.

காலையில் வீட்டிலிருந்து ஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் தந்தை, தனது தொழிலுக்குச் செல்கின்ற போது, தனது மகளையும் முள்பள்ளிக்கு ஏற்றிச்சென்று இறக்கி விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வாறே நேற்று முன்தினம் (11.05.2018) காலை வீட்டிலிருந்து வானில் மகளை ஏற்றிக்கொண்டு சென்ற தந்தை, முன்பள்ளியில் மகளை இறக்கிவிட்டு வாகனத்தை திருப்பிய போது, வழமைக்கு மாறாக மகள் வாகனத்தின் முன்பகுதியின் ஊடாக முன்பள்ளிக்குள் நுழைவதுக்கு எத்தனித்த போது தந்தையின் வாகனத்துடன் மோதுண்டுள்ளார்.

உடனடியாக தந்தை, மகளை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமி பெற்றோருக்கு ஒரேயொரு மகளாவார். விசாரணைகளை பொலீஸார் முன்னெடுத்துள்ளனர்.