யாழ். மாநகரத்தை பசுமைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் 4 ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இதன்படி இவ் வேலைத்திட்டமானது மத்திய அரசு, வடக்கு மாகாண சபை, யாழ்.மாநகர சபை ஆகியவற்றுடன் இணைத்து முன்னெடுக்கவுள்ளதாகவும் அரச திணைக்களங்கள் மற்றும் இராணுவத்தின் ஒத்துழைப்பும் இதற்கு பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இவ் வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று (15) வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதனை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகத்தில் தற்போது காலநிலை மாற்றமானது ஏற்பட்டுள்ளது. இது இயற்கையின் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு காலநிலை மாற்றமானது ஏற்பட்டு மழை வீச்சி பாதிப்படைந்தமைக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் காடழிப்பே பிரதான காரணமாகும்.
பல மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டும் காடுகள் அழிக்கப்பட்டமையாலும் பசுமை தன்மை அற்றுப்போயுள்ளது. இதனால் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை எதிர்கால சந்ததியினர் எதிர்கொள்ள கூடாது என்பதுக்காக மத்திய அரசு, வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வடக்கு மாகாண சபை மற்றும் யாழ்.மாநகர சபை ஆகியன இணைந்து இவ் வேலைத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
இதன்படி எதிர்வரும் 05ஆம் திகதி இம் மரக்கன்றுகள் நாட்டப்படவுள்ளன. இம் மரக் கன்றுகள் நாட்டுவதற்கான இடங்களை யாழ்.மாநகர சபையானது தெரிவு செய்து தந்துள்ளது. அத்துடன் ஒவ்வொரு நிலங்களின் தன்மை, நீரின் தன்மை என்பவற்றுக்கு ஏற்ப அவ் இடங்களுக்குரிய மரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் 600 மரங்கள் வரையில் யாழ்.மாநகர சபையால் பராமரிக்கப்படவுள்ள நிலையில் ஏனைய பயன்தரு மரங்கள் பாடசாலைகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. இச் செயற்திட்டத்தின் மூலம் பச்சை நிறமான யாழ்.மாநகரத்தை உருவாக்க முடியும்.
எனவே இச் செயற்திட்டத்துக்கு அனைத்து திணைக்களங்களினதும், மாவட்டச் செயலரினதும், பாடசாலைகளிடமும், இராணுவத்தினரதும், பொது அமைப்புக்களினதும் ஒத்துழைப்புக்கள் பெறப்பட்டுள்ளன என தெரிவித்தார். இதேவேளை இச் சந்திப்பில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் சி.சிவனேசன், யாழ்.மாநகர மேயர் இ.ஆனோல்ட், ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்