ஒன்பதாவது ஆண்டாக முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நாளை தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசம் எங்கும் உணர்வு எழுச்சியுடன் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படவுள் ளதுடன் அன்றைய தினம் துக்கதினமாக அனுஷ்டிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் மண்ணில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலும் வடக்கு மாகாண சபை, பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புகள் ஆகியவற்றின் பங்களிப்பில் பேரெழிச்சியுடன் நாளை காலை 11 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட அதேவேளை ஆயிரக்கணக்கான போராளிகளும் உயிர்த்தியாகம் செய்திருந்தனர்.
இந்த கொடிய நினைவு ஒன்பது வருடங்களுக்கு முன்னர் இதேநாளில் நடைபெற் றிருந்தது.  

 குண்டு வீசியும் இராணுவத்திடம் சரணடைந்த மக்கள் மற்றும் போராளிகள் கொடுமையான முறையில் கொல்லப்பட்டதோடு, ஆயிரக்கணக்கான மக்கள் காணாமலும் ஆக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு நடைபெற்ற அநீதிகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தான் வலிகள் நிறைந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நாளைய தினம் தமிழர் தாயகம் எங்கும் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதில் பிரதானமான நிகழ்வு   முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெறவுள்ளது.

இந்த நாள் துக்க தினமாக அனுஷ் டிக்கப்படவுள்ளதால் வடகிழக்கு மாகாணங்கள் முழுவதும் அதாவது பாடசாலைகள், வியாபார நிலையங்கள், நிறுவனங்கள் போன்றவற்றில் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்படவுள்ளன.
மரணத்தை தழுவியவர்களின் ஆத்ம சாந்திக்காக ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும்.

வர்த்தகர்கள் நண்பகல் 12 மணிவரை தமது கடைகளை அடைத்து உணர்வுகளை வெளிப்படுத்துமாறும், பாடசாலைகளில் 11 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலிக்குமாறும், தனிப்பட்டவர்கள் கைகளில் கறுப்பு பட்டி அணிந்து துயரத்தை வெளிப்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.