கடந்த 13.05.2018 வவுனியாவில் இடம்பெற்ற ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் செயற்குழு கூட்டத்தில் திரு. ஜி.ரி.லிங்கநாதன் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உமாமகேஸ்வரன் பவுண்டேசன் சம்பந்தமாக ஆராயப்பட்டது. இதன்போது திரு. லிங்கநாதன் அவர்கள் உமாமகேஸ்வரன் பவுண்டேசன் தொடர்பாக விளக்குகையில்,

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பதாகவே உமாமகேஸ்வரன் பவுண்டேசனுக்கான பூர்வாங்க வேலைகளை தானாக ஆரம்பித்துவிட்டதாகவும், அண்மையில்தான் அதற்கான பதிவு கிடைத்திருப்பதாகவும், தானும் வேறு சிலருமாக சேர்ந்துதான் இதனை ஆரம்பித்து பதிவு செய்துள்ளதாகவும் கூறியதோடு, அதனை பதிவு செய்த பின்புதான் தலைவருக்கோ, செயலாளருக்கோ அதுபற்றி அறிவித்ததாகவும், அந்த அமைப்புக்கென பெருந்தொகையான நிதியினை சேர்ப்பதற்கான வழிவகைகளை தான் அறிந்துள்ளதாகவும், புளொட் தோழர்களுக்கு மாத்திரமல்ல, போராட்டத்தால் பாதிக்கப்பட்ட ஏனைய இயக்க தோழர்கள், பொதுமக்கள் என அனைவருக்குமே இதன்மூலம் உதவுவதுதான் தன்னுடைய நோக்கம் என்றும் தன்னுடைய நிலைப்பாட்டினை விளக்கிக் கூறினார்.

அத்துடன் உமாமகேஸ்வரன் பவுண்டேசனுக்கு போசகராக தலைவரையும், செயலாளரையும் மற்றும் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களுடைய குடும்பத்தினரில் ஒருவரையும் நியமிப்பதற்காக அவர்களைக் கேட்டிருப்பதாகவும், அவர்கள் விரும்பினால் அந்த பதவிகளுக்கு வரலாம் என்றும் கூறினார்.

அவருடைய விளக்கங்களை செவிமடுத்த பின்பு கருத்துத் தெரிவித்த தலைவர் சித்தார்த்தன் அவர்கள், அவர் ஒரு நல்ல முயற்சியை ஆரம்பித்திருக்கின்றார். அந்த முயற்சியை நாங்கள் குழப்பிவிடக்கூடாது, அவர் விரும்பினால் அதை நடத்தலாம். அதேநேரத்தில் புளொட்டுக்கும் உமாமகேஸ்வரன் பவுண்டேசனுக்கும் எந்தவித சம்பந்தமும் இருக்கக்கூடாது, இருக்கவும் மாட்டாது என்று வலியுறுத்திக் கூறினார்.

அதை அவர் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, உமாமகேஸ்வரன் பவுண்டேசன் அமைப்பு புளொட்டுக்கு சம்பந்தமில்லாத ஓர் அமைப்பாக இயங்க வேண்டும் என்றும், இயக்கத் தோழர்களோ, முன்னைநாள் தோழர்களோ என யார் விரும்பினாலும் உமாமகேஸ்வரன் பவுண்டேசனிலிருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது.