யாழ். நல்லூர் யமுனா ஏரியில் இருந்து பிரபல தவில் வித்துவானின் சடலம் நேற்று(19) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. யாழ். செம்மணி வீதியைச் சேர்ந்த இராமையா ஜெயராசா (ஜெயம் – வயது66) என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

5 பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த 17ஆம் திகதி மாலைமுதல் காணாமல் போயிருந்த நிலையில் குடும்பத்தினரால் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்றுக்காலை பெண் ஒருவர் யமுனா ஏரிக்கு தண்ணீர் அள்ளச் சென்றவேளையில், ஏரிப் பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து இறந்த உடலின் துர்நாற்றம் வீசுவதாக அந்த பிரதேச கிராம அலுவலருக்கு அறிவித்துள்ளார். கிராம அலுவலர் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் யாழ்ப்பாணம் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

யமுனா ஏரி தண்ணீரை அப்பிரதேச மக்கள் பயன்படுத்தி வருகின்றதாகவும், அந்தப் பகுதியில் பாதுகாப்பு வேலி இல்லாத நிலையில், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யமுனா ஏரி நீரை பாதுகாப்பதற்குரிய பாதுகாப்பு வேலி அமைத்து தருமாறு பல தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் எவரும் பாதுகாப்பு வேலி அமைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை என்றும் கடந்த காலங்களிலும் யமுனா ஏரியில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.