நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 38,040 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 8 பேர் சீரற்ற காலநிலையால் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

15 மாவட்டங்களில் சீரற்ற காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை களனி, களு, ஜிங், நில்வலா மற்றும் மகாவலி ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்களை அவதாகத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மா ஓய மற்றும் அத்தனகலு ஓயவை அண்டிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இயற்கை அனர்த்தங்களுக்குள் சிக்கும் மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவும், நிவாரணங்களை வழங்கவுமென கடற்படையைச் சேர்ந்த 27 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

அத்துடன் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிப்படைந்துள்ள இரத்தினபுரி கலவான பிரதேசத்திலிருந்து, கர்ப்பிணி பெண்கள் 9 பேர் உட்பட 170 பேரை கடற்படையினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் இணைந்து காப்பாற்றியுள்ளனர்.

அத்துடன் ஹெமில்டன் வாவி பெருக்கெடுத்துள்ளமையின் காரணமாக புத்தளம் – கொழும்பு ரயில்சேவை பாதிப்படைந்துள்ளது. லுணுவில ரயில் நிலையத்துடன் ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வாகன போக்குவரத்து ஒருவழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கினிகத்தென்ன – தியகல மற்றும் கினிகத்தென்ன – ரம்பாதெனிய ஆகிய பிரதேசங்களில் பல இடங்களில் கற்கள் சரிந்து வீழ்ந்ததில், குறித்த வீதியில் போக்குவரத்து ஒருவழியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடுவளை நகரை அண்மித்த பகுதி வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அங்கு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில், அந்நீரானது பிரதான வீதியை ஊடறுத்து செல்கிறது. அப்பகுதியிலுள்ள பல வீடுகள் இதனால் நீரில் மூழ்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது. கொழும்பு -அவிசாவளை பிரதான வீதியூடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகன சாரதிகள், பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.