யாழ்.திருநெல்வேலியில் இன்று பிற்பகல் திடீரென தென்னைமரத்தின் மீது மின்னல் தாக்கியதில் குறித்த தென்னை மரம் தீப்பற்றி எரிந்துள்ளது.

இது தொடர்பில் யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் வழங்கப்பட்ட நிலையில் சுமார் அரை மணித்தியாலத்திற்கும் மேலாகக் கொளுந்துவிட்டு எரிந்த தீயை விரைவாகச் செயற்பட்ட தீயணைப்புப் படையினர் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இடி மின்னல் தாக்கத்தால் இடி விழுந்த வீட்டில் வசித்த வந்த குடும்பம் தெய்வாதீனமாக உயிர் தப்பிய போதும் வீட்டின் பிரதான மின் இணைப்பு ஆளி வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் வீட்டின் பல பகுதிகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரமும் பழுதடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளரான குடும்பப் பெண் தெரிவிக்கையில், ‘கணவர் வேலைக்குச் சென்றுள்ள நிலையில் நானும் எனது சிறுவயதுப் பிள்ளையும், அம்மாவும் வீட்டுக்குள் இருந்தோம். திடீரென பெரும் சத்தத்துடன் வீட்டுக்குள்ளிருந்த பிரதான மின் இணைப்பு ஆளி வெடித்துச் சிதறியது.

இதனால் நாம் பயத்துடன் வீட்டுக்குள்ளேயே நின்றோம். பின்னர் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த போது தென்னைமரம் கொளுந்துவிட்டு எரிவதை அவதானித்தோம்” என்று கூறியுள்ளார்.