தம்மால் நடத்தப்படும் மேலதிக வகுப்புக்களுக்கு வருமாறு மாணவர்களுக்கு மற்றும் பெற்றோருக்கு அழுத்தம் கொடுக்கும் 31 ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாகாணங்களில் இருந்து இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர்களின் மேலதிக வகுப்புகளில் கலந்துகொள்ளாத மாணவர்கள் பாடசாலைகளில் பல்வேறு வகையில் இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக குறித்த முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டி, ஹொரணை, களுத்துறை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, கெகிராவை, இரத்தினபுரி மற்றும் கிளிநொச்சி போன்ற பிரதேசங்களை சேர்ந்த 25 ஆசிரியர்களுக்கு எதிராகவும், 6 தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு எதிராகவும் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதேபோல், கல்வி அமைச்சின் 19 88 என்ற இலக்கத்திற்கு அழைத்து இது போன்ற சம்பவங்கள் தொடர்பில் பெற்றோர்கள் தொடர்ந்தும் முறைப்பாட்டுக்களை பதிவு செய்ய முடியும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.