இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மன்னார் மடு திருத்தலப் பகுதியில் யாத்திரிகர்களுக்கான தற்காலிக வீடுகள் அமைப்பது தொடர்பாக உயர்மட்ட கலந்துரையாடல் இன்றுகாலை 11 மணியளவில் மடு திருத்தலத்தில் இடம்பெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குறித்த உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளை, கிறிஸ்தவ மத விவகார அமைச்சின் பணிப்பாளர் எம்.குணவர்தன, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர், இந்திய துணைத்தூதரகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் டி.சி.மஞ்சுநாத், மடு பிரதேசச் செயலாளர் வி.ஜெயகரன், மன்னார் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எல்.ஜே.றொசன் குரூஸ் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இடம்பெற்ற குறித்த உயர்மட்ட கலந்துரையாடலின்போது இந்திய அராசங்கம் வழங்கும் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மடு திருத்தலத்திற்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு யாத்திரிகர்களுக்கான 300 தற்காலிக வீடுகள் அமைப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 300 வீடுகள் அமைக்கப்படவுள்ள இடத்தினை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையிலான குறித்த குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டனர். இறுதியாக குறித்த வீட்டு திட்டம் அமைக்கும் பணிகளை ஆரம்பிக்கும் வகையில் அடுத்த மாதம் முதலாம் திகதி அடிக்கல் நாட்டி வீட்டுத்திட்டத்தை ஆரம்பிப்பதாகவும், அதற்கான துரித நடவடிக்கைகளை உரிய திணைக்களங்கள் முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.