சீரற்ற வானிலையின் காரணமாக, புத்தளம் மாவட்டத்தில் 6,255 குடும்பங்களைச் சேர்ந்த, 24,133 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, புத்தளம் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களை தங்கவைப்பதற்காக, 81 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மஹவௌ பகுதியில் 15 முகாம்களும், தங்கொட்டுவ பகுதியில் 1 முகாமும், ஆராச்சிக்கட்டுவ பகுதியில் 9 முகாம்களும், நாத்தாண்டிய பகுதியில் 39 முகாம்களும், சிலாபத்தில் 11 முகாம்களும், வென்னப்புவ பகுதியில் 5 முகாம்களும், கற்பிட்டி பிரதேசத்தில் 01 முகாமும் அமைக்கப்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சீரற்ற வானிலையால் புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர். எச்சரிக்கைகளை மீறி செயற்பட்ட காரணத்தினால் இவர்கள் உயிரிழந்திருப்பதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தம்போவ மற்றும் கற்பிட்டிஆகிய பிரதேசங்களில் மின்னல் இருவர உயிரிழந்துள்ள அதேவேளை, வென்னப்புவ பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் பிங்ஓயாவில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தம்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் நேற்றைய தினம் வரை திறந்து வைக்கப்பட்டிருந்தன. இதிலிருந்து 470 கன அடி நீர் வெளியேற்றப்பட்டதன் காரணமாக, தாழ் நில மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் முன்னெச்சரிக்கை விடுத்திருந்தது.

மேலும் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் 1 அடி உயரத்துக்கு திறக்கட்டுள்ளதுடன், தெதுறுஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் 1 அடி உயரம் வரை திறந்து வைக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.