முல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவினை சேர்ந்த 28 வயதான வரதராஜா சதாநீசன் ஆவார்.

நேற்று மாலை முதல் மகனை காணாத குறித்த இளைஞரது தந்தை பல இடங்களிலும் தேடித் திரிந்துள்ளார். இந்நிலையில் செல்வபுரம் கள்ளுத்தவறணை பகுதியிலுள்ள பனங்கூடலுக்குள் மோட்டார் சைக்கிள் ஒன்று நெடு நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை அவதானித்த சிலர் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை பார்வையிட்டதுடன் அருகில் உள்ள பனங்கூடலுக்குள் சென்று பார்வையிட்டபோது கழுத்து அறுபட்ட நிலையில், வெட்டுக்காயங்களுடன் இளைஞனின் உடலை கண்டெடுத்துள்ளனர். இதேவேளை குறித்த இளைஞனின் தந்தையும் கிராமமக்கள் கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை கொண்டு தனது மகனின் சைக்கிள் என அடையாளம் காட்டிய தந்தை உடலையும் அடையாளம் காட்டியுள்ளார். இதனை தொடர்ந்து இன்று காலை கிளிநொச்சியிலிருந்து வருகைதந்த விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் கொலை நடந்த இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் லெனின்குமார் சடலத்தை பார்வையிட்ட பிறகு சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை, கொலைக்கான காரணங்களும் கண்டறியபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.