பாடசாலை மாணவர்களுக்கு மாவா போதைப்பொருள் விற்பனை செய்த இரு இளைஞர்கள்களை வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் பகுதியில் வைத்து நேற்று மாலை குறிப்பிட்ட இருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு மாவா போதைப் பாக்கு விற்பனை செய்வதாக பல தரப்பினராலும், வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடுத்து வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் 30 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனனர். அந்த பொலிஸ் குழுவினர் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை பொதுமக்களினால் வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம், தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

அவ்வாறு நடாத்தப்பட்ட தேடுதலின்போது, நேற்றுமாலை, பெருமாள் கோவில் பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த நபர்களிடமிருந்து 500 கிராம் மாவா என்று அழைக்கப்படும், போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

31 மற்றும் 29 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.