தமிழ்மொழி மூல ஆசிரியர்கள் 1500 பேர் 2 வருட ஆசிரியர் பயிற்சியை நினைவு செய்து இம்மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் பாடசாலைகளில் கற்பித்தல் பணியில் இணைந்து கொள்கின்றனர்.

2016, 2017 ஆம் கற்கை ஆண்டு ஆசிரியர் பயிற்சி கற்கை நெறிகளில் இணைந்து ஆசிரியர் பயிற்சியை பெற்றுக்கொண்ட இவர்கள் இரண்டு வருட பயிற்சியை நிறைவு செய்துகொண்டு எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் இருந்து வெளியேறுகின்றனர். இவர்களில் 322 ஆசிரியர்கள் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்றவர்களாகும். மலையகப் பாடசாலைகளின் ஆசிரியர் ஆளணியை கருத்தில்கொண்டு போட்டிப்பரீட்சை மூலம் ஆசிரிய உதவியாளர்களாக நியமனம் பெற்ற இவர்கள் ஆசிரியர் கலாசாலைகளில் பயிற்சி பெறுவதற்கு 2016 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டனர். இலங்கையில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் நான்கு தமிழ்மொழி ஆசிரியர் கலாசாலைகளில் இவர்கள் பயிற்சிபெற்றனர்.

இவர்களுக்கு ஆசிரியர் கலாசாலை பயிற்சிக்கான இறுதிப்பரீட்சையில் சித்தியடைந்த பின்னர் இலங்கை ஆசிரியர் சேவை வகுப்பு 3 (ஆ) தரத்தில் உள்ளீர்ப்பு செய்யப்பட்டு ஓய்வூதிய உருத்துடன் கூடிய சம்பளத்திட்டத்தின் படி சம்பளம் வழங்கப்படும். ஆசிரியர் உதவியாளர் நியமனம் பெற்ற இவர்களுக்கு ஊக்குவிப்பு உதவி என்ற வகையிலேயே மாதாந்தம் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.