அண்மையில் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மயிலிட்டி 683 ஏக்கர் காணிகளில் மீள்குடியேற்றம் செய்வதற்கு ஆயிரத்து 600 மில்லியன் ரூபா தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள மயிலிட்டியில் சுமார் 683 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் மீள்குடியேற்றம் செய்வதற்கான மதிப்பீட்டுப் பணிகள் துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளினால் மதிப்பீடு செய்யப்பட்டது. இதன்போது சுமார் ஆயிரத்து அறுநூறு மில்லியன் ரூபா தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அம்மதிப்பீட்டின்படி வீட்டுத் திட்டம், அடிப்படை வசதிகள், கட்டுமானப்பணிகள் மேற்கொள்வதற்காகவே இதற்கான மதிப்பீடுகள் செய்யப்பட்டு மீள்குடியேற்ற அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிதியுதவிகள் கிடைக்கும் பட்சத்தில் விரைவான மீள்குடியேற்றங்கள் நடைபெறும் இதேவேளை தற்போது காணிகள், பாதைகள் துப்புரவு, கிணறுகள் புனரமைப்புக்கள் இடம்பெற்று வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.