யாழ். தென்மராட்சிப் பகுதியில் சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட கோகிலாக்கண்டிக் கிராமத்தில் அமைந்துள்ள காந்தி முன்பள்ளியின் வேண்டுகோளுக்கிணங்க, அப் பள்ளிச் சிறுவர்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான மண்ணில் வடிவமைக்கப்பட்ட நீர்க் குடுவை, அடுப்பு, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிக்குத் தேவையான பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை புளொட் அமைப்பினர் வழங்கியிருந்தனர்.

22.05.2018 அன்று இடம்பெற்ற இந் நிகழ்வில் ரூ 7500/= பெறுமதியான இப் பொருட்கள், ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் R. சர்வேஸ்வரன், காந்தி சனசமூக நிலையத்தின் தலைவர் A. பாலேந்திரா, பொருளாளர் K. சிறீஸ்கந்தராசா, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் சாவகச்சேரி பிரதேச செயற்பாட்டாளர் திரு. A.சிவகுமார், கல்வி, பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் பொருளாளர் ஆர்.தயாபரன் முன்னிலையில் முன்பள்ளி ஆசிரியை லாவன்யா சற்குணநாதனிடம் கையளிக்கப்பட்டிருந்தன.சிறுவர்களுக்கான சத்துணவை தயாரிப்பதற்காக அடுப்பும், குடிநீர்த் தேவைக்காக கல்வித் திணைக்கள அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கமைய மண்ணாலான நீர்க்குடுவையும் வழங்கப்பட்டிருந்தன. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) சுவிஸ் தோழர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார்(குமார்) அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவாக அனுப்பிவைக்கப்பட்ட நிதியின் இறுதிக்கட்டமாக இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது.

சுவிஸில் வதியும் திரு. விஜயநாதன் இரட்ணகுமார் அவர்களுக்கு காந்தி முன்பள்ளி ஆசிரியரும் காந்தி சன சமூக நிலையத்தினரும் தமது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர். ஏற்கனவே, வாகரையில் அமைந்துள்ள திலகவதியார் மகளிர் இல்லத்தினருக்கும், மாங்குளம் கல்குவாரிப் பிரதேசத்தைச் சேர்ந்த நா. சந்திரசேகரம் என்பவரது வாழ்வாதாரத்திற்கும், மாங்குளத்தில் அமைந்துள்ள விசேட தேவையுடையோருக்கான மகிழ்வகம் – வன்னி எனும் அமைப்புக்கும் நிதியுதவிகள் திரு வி.இரட்ணகுமார் அவர்களால் வழங்கப்பட்டிருந்தன.