நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது.

இரண்டு பேர் காணமற்போயுள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. 1,53,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி எஸ்.அமலநாதன் குறிப்பிட்டுள்ளார். பலத்த மழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை இன்றுமாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, எலபாத்த, எஹலியகொட ஆகிய பகுதிகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் புலத்கொ{ஹபிட்டிய, தெஹிஓவிட்ட, தெரணியகல, ருவன்வெல்ல, மாவனெல்ல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை ஆகிய பகுதிகளுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த, பாலிந்தநுவர புலத்சிங்கள, இங்கிரிய மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, நாகொட, நெலுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பூண்டுலோயா சவுத் மடக்கும்புற தோட்டத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். சவுத் மடக்கும்புற தோட்டத்தில் சுமார் 300 அடி உயரமான மலைக்குன்றில் கடந்த சில நாட்களாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தோட்டத்திலுள்ள மண்டபம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, மொனராகலை – முப்பனாவெளி தோட்டத்திலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒரு குடும்பம் நிர்கதிக்குள்ளாகியுள்ளது. பாதிக்கப்பட்ட தம்மை அதிகாரிகள் பார்வையிடவில்லை என அவர்கள் குறிப்பிட்டனர்.