நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை மற்றும் காலி முதலான ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் தொடர்ந்தும் அமுலாவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையினால் 20 மாவட்டங்களில் 157 பிரதேச செயலாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 36 ஆயிரத்து 50 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 வரை அதிகரித்துள்ளது. இடி, மின்னல் தாக்கம், நீரில் மூழ்கியமை, மரங்கள் முறிந்து விழுந்தமை மரணங்களுக்கான காரணங்களாகும்.

3 ஆயிரத்து 841 வீடுகள் பகுதி அளவிலும், 64 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. 13 ஆயிரத்து 199 குடும்பங்களை சேர்ந்த 53 ஆயிரத்து 616 பேர் 231 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.