இந்தியாவின் தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தியும் படுகொலை செய்தவர்களை கண்டித்தும் இலங்கையில் இன்று ஆரப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கண்டன ஆர்ப்பாட்டமும் அஞ்சலி நிகழ்வும் இன்றுகாலை நடைபெற்றது. இதன்போது தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலி நிகழ்வை தொடர்ந்து தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேவேளை இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை கண்டித்து இன்றுகாலை திருகோணமலை நகரத்திலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த கண்டண ஆர்ப்பாட்டம் சுமார் 1மணித்தியாலயம் வரை நடைபெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.