யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றின் பிரதேச செய்தியாளர் மற்றும் பத்திரிகை விநியோகஸ்தர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்களால் இன்று அதிகாலை வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா இராஜேந்திரன் (வயது -55) என்பவரே படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம், கொழும்புத்துறை துண்டிச் சந்தியில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் ஐந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பத்திரிகை விநியோகத்துக்கு சென்று திரும்புகையில் யாழ்ப்பாணம், கொழும்புத்துறை துண்டிச் சந்தியில் வழிமறித்த 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாகத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

குறித்த தாக்குதலை மேற்கொண்ட 10 பேரும் முகத்தை துணியால் மறைத்திருந்ததுடன் அவர்களிடம் கைக்கோடாரி, வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.