மன்னார்-சௌத்பார் கடற்கரைக்கு செல்லும் வீதியில் புகையிரத நிலையத்துக்கு முன் பகுதியில் கத்தோலிக்க கன்னியர் மடம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைந்திருந்த மரியன்னையின் சிலை நேற்று இரவு இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார்-சௌத்பார் கடற்கரைக்கு செல்லும் பாதையில் புகையிரத நிலையத்துக்கு முன் பகுதியில் அமைந்திருந்த மரியன்னையின் சிலை வீதி ஓரத்தில் சிறிய கோவில் போன்று அமைக்கப்பட்டு பல வருடங்களாக அவ்விடத்தில் வழிபட்டுவந்த மரியன்னையின் சிலையே இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த மரியன்னையின் சிலை வைக்கப்பட்டிருந்த சிறிய கண்ணாடி பேழையானது மேற்பகுதி உடைக்கப்பட்டதோடு, அதனுள் வைக்கப்பட்டிருந்த மரியன்னையின் சிலை உள்ளிருந்தவாறே சேதப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வீதியூடாக இன்று காலை பயணித்த மக்கள் குறித்த சிலை உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதை கண்டு உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தியுள்ளதோடு, மன்னார் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

அண்மைக் காலமாக மன்னார் மாவட்டத்தில் தெய்வங்களின் சிலைகள் இனம்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு வருகின்றபோதும், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றபோதிலும் சிலைகள் உடைப்பு தொடர்பில் இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.