அனைத்து அரச நிறுவனங்களிலும் அரசமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பணியாற்றக்கூடிய மொழி உதவியாளர்கள் 3300 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இது தொடர்பில் தான் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக கொழும்பு லக்ஸ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். இதற்காக விண்ணப்பிக்கும் தமிழ் மொழி விண்ணப்பதாரர்கள் கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தமிழ் மொழிக்கு மேலதிகமாக சிங்களமொழியில் சித்தியடைந்திருக்க வேண்டும். அதேபோல் சிங்கள விண்ணப்பதாரர்கள் சிங்கள மொழிக்கு மேலதிகமாக தமிழ் மொழியில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

இந்த பதவிக்காக இணைத்துக் கொள்ளப்படுபவர்கள் பயிற்சி வழங்கப்பட்டு அனைத்து அரச அலுவலகங்களிலும் இணைத்துக் கொள்ளப்படுவர். அமைச்சு மட்டத்தில் அரசமொழிக்கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மாற்றுக்கொள்கை கேந்திர நிலையம் நடத்திய ஆய்வு அறிக்கையை வெளியிடும் பொருட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் இந்த நாட்டின் அரசமொழியாக சட்டமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பெரும்பாண்மையான அரச நிறுவனங்களில் இதற்கமைவாக பணிகள் இடம்பெறுவதில்லை. இதனால் தமது பிரச்சனைகளுக்காக தாய்மொழியில் தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக செல்லும் பெரும்பாலானோர் இரண்டு மொழிகளை அறிந்த அதிகாரிகள் அந்த நிறுவனங்களில் இல்லாததினால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இதற்கு தீர்வாக 2008 ஆம் ஆண்டிலிருந்து அரச அதிகாரிகளுக்கு தமிழ்மொழி தொடர்பிலான 12நாள் வகுப்புகள் நடத்தப்பட்டபோதிலும் இது வெற்றிபெறவில்லை. இதன்காரணமாக பிரதேசசெயலர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களுக்கும் மொழி உதவி உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். அமைச்சு மட்டத்தில் அரசமொழிக்கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பான அறிக்கையின் பிரதி அங்கு வருகை தந்திருந்த அதிகாரிகளுக்கு அமைச்சரினால் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தகவல்களை அறிந்துகொள்ளும் ஆணைக்குழுவின் அங்கத்தவர் சட்டத்தரணி எஸ்.ஜி புஞ்ஜிஹேவா, மாற்றுக்கொள்கை கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, சிரேஷ்ட அகதிகாரி லயனல் குருகே ஆகியோர் கலந்துகொண்டனர்.