மனித உரிமைகள் நிறுவனங்களின் உலகலாவிய அமைப்பினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு ‘ஏ” தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் சுதந்திரம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் பேணப்படுகின்றமை தொடர்பில் ஆராயப்பட்டத்தன் பின்னரே ‘ஏ’ தர சான்றிதழ் வழங்கப்படும். அந்த வகையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இது கிடைத்துள்ளமை இலங்கை மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி என அதன் தலைவர் என டி.உடகம தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்ததாவது, தேசிய மனித உரிமை நிறுவனங்களின் உலகலாவிய அமைப்பாக சர்வதேச மனித உரிமைகள் நிறுவனம் (GANHRI)செயற்பட்டுவருகின்றது. 1993 பரிஸ் கொள்கைக்கு இனங்க தேசிய மனித உரிமை நிறுவனம் செயற்படுகின்றதா என்பதை கண்காணிப்பதே இதன் பிரதான கடப்பாடாகும்.
இக் கொள்கை ஐ.நா பொது சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உலகலாவிய தரமாக பேணப்பட்டு வருகின்றது. இதன் முக்கிய அம்சம் அரசியல் சுதந்திரமானது சட்டமாகவும், நடைமுறையிலும் பேணப்பட்டு வருகின்றன. இவ்வருடம் ஜனவரியில் 120 தேசிய மனித உரிமைகள் நிறுவனங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன.
எனினும் 77 நிறுவங்களுக்கு மாத்திரமே “ஏ” தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தவிர இந்தியா மற்றும் நேபாளம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கும் “ஏ” சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் 15 நாடுகளின் நிறுவனங்கள் முதற்தர சான்றிதழைப் பெற்றுள்ளன.
19 ஆம் அரசியலமைப்பு சீர் திருத்தின் மூலம் இரண்டரை வருடங்களாக சுயாதீன ஆணைக்குழுவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை நிறுவனம் என்ற முறையில் மட்டுமல்லாது இலங்கை பொது மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். இதன் மூலம் ஆணைக்குழு மேலும் நுணுக்கமாகவும் சிறப்பாகவும் செயற்பட வேண்டியமை எதிர்பார்க்கப்படுகின்றது.