புத்தளம் மாவட்டத்தின் உடப்பு மற்றும் ஆனமடு கிராமங்களுக்கு மக்கள் பயணம் செய்வதற்காக, கடற்படையினரால் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கினால் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, ஐந்து கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய, சுமார் 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெள்ளநீர் வடிந்தோடாமையின் காரணமாக போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். எனவே பொதுமக்கள் போக்குவரத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இவ்வாறு படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 100 வருடங்கள் பழைமையான குறித்த கிராமங்களில் வசிக்கும் மக்கள், மழைக்காலங்களில் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளாந்தம் கடற்படையினர் பாதுகாப்பான முறையில் படகுச் சேவையை மேற்கொண்டு வருவதுடன், சுமார் 1,500 பேர் நாளாந்தம் இதில் பயணிப்பதாகவும், ஆனால் அவர்களிடம் எவ்வித கட்டணத்தையும் கடற்படையினர் அறவிடாது, சேவை மனப்பாங்குடன் இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதிகாலை 5.30 மணிமுதல் இரவு 8.30 வரை படகுச் சேவை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.