தமிழகம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கொலையுண்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டக் கோரியும் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்களால் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. காற்றையும் நீரையும் நிலத்தையும் அசுத்தமாக்கும் நிறுவனத்திற்கு எதிராக 100 நாட்கள் போராட்டம் நடத்திய தூத்துக்குடி மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையை தமது சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கடுமையாக எதிர்ப்பதாக அவ்வமைப்பின் உறுப்பினர் முரளிதரன் மயூரன் தெரிவித்தார்.

இதேவேளை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி சட்டமன்றத்தில் நேற்று (29) விளக்கமளித்திருந்தார். கடந்த 22 ஆம் திகதி தடையுத்தரவை மீறி நடத்தப்பட்ட பேரணியின் போது முன்னெச்சரிக்கை மீறப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தடையுத்தரவை மீறி போராட்டக்காரர்களுடன் சில அரசியல் கட்சிகள், அமைப்புகள் இணைந்து அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தியதாகவும் பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.