2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், 2.5 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பஸ் போக்குவரத்தைத் தவிர்த்து மாற்றுப் போக்குவரத்துக்கு மாறியுள்ளதாக இலங்கைத் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர், கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

பயணிகளில் பெரும்பாலானோர், பஸ் போக்குவரத்தைத் தவிர்த்து, மோட்டார் பைசிக்கள், மோட்டார் வாகனங்கள், தனியார் அலுவலக போக்குவரத்து வாகனங்கள் மற்றும் ரயில்களில் பயணஞ்செய்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, இந்நிலைமை 2020 ஆம் ஆண்டுவரையில் தொடர்ந்தால், பஸ் போக்குவரத்துத் துறை மிகப்பெரிய சவாலை சந்திக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.

தனியார் பஸ் நடத்துனர்கள் மற்றும் பஸ் சாரதிகளின் நடத்தைகள், பஸ்கள் மெதுவாக பயணிக்கின்றமை, பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்நிலைமை உருவாகியுள்ளதோடு, இது தொடர்பில் எவரும் கண்டுகொள்ளவில்லையெனவும் கவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, தரமற்ற போக்குவரத்துச் சேவையினை வழங்குவதாலேயே பயணிகள் தற்போது பஸ் போக்குவரத்தைத் தவிர்க்க ஆரம்பித்துள்ளதாக இலங்கை மோட்டார் சைக்கிள் சங்கத்தின் தலைவர், சிராந்த அமரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.