ஐக்கிய அமெரிக்காவின் ஆயுதம் தாங்கிய படைகளின் காங்கிரஸ் குழு பிரதிநிதிகள் நேற்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர்.

பிரதிநிதிகள் குழுவின் தலைவர் மக்கிலேனென் தொன்பெர்ரி, என்ரிக் என்றிக் குலார், விக்கி ஹாஸ்லேர், கரோல் ஷி போர்ட்டர் உள்ளிட்டோர் நேற்று ஜனாதிபதியை சந்தித்தனர். இலங்கை உலக நாடுகளுடன் ஒத்துழைப்புடனும் நட்புடனும் செயற்படும் நாடு என்று இதன்போது தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை இராணுவத்தின் பயிற்சி நடவடிக்கைகளுக்கு ஐக்கிய அமெரிக்காவிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பினை விசேடமாக நினைவுகூர்ந்தார். இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையில் இராணுவ பயிற்சி செயற்திட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதுடன், அவற்றை மேலும் அபிவிருத்தி செய்து பாதுகாப்பு சேவையில் தொழில்நுட்ப அறிவின் பயன்பாட்டினை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நவீன உலகில் பாதுகாப்பு சேவைகளில் தொழில்நுட்பம் இன்றியமையாததென தெரிவித்தார்.

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படும் மார்க்கங்களை கட்டுப்படுத்துவதற்கு ஐக்கிய அமெரிக்காவின் உதவி அவசியமாகும் என்பதுடன், அதன்பொருட்டு இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு காணப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை இலங்கைக்கு வழங்க இணக்கம் தெரிவித்த காங்கிரஸ் குழு உறுப்பினர்கள், இலங்கையை பலமான சுபீட்சம்மிக்க நாடாக கட்டியெழுப்புவதற்கு தேவையான உதவிகளை வழங்குதல் தமது நாட்டின் கொள்கை எனவும் தெரிவித்தனர்.

இலங்கையின் உள்நாட்டுப் பாதுகாப்பானது, பிராந்திய பாதுகாப்பிற்கும் உலகளாவிய அமைதிக்கும் முக்கியமானதென குறிப்பிட்ட காங்கிரஸ் பிரதிநிதிகள், இருநாடுகளும் இடையிலான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புக்களை பலப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகள் தொடர்பாக கண்டறிதலே தமது இந்த விஜயத்தின் நோக்கமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.