தருமபுரம், உழவனூர் பகுதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் டெங்குக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். நேற்று  காலை கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

10 நாட்களுக்கு முன்னர் கொழும்புக்குச் சென்றிருந்த இவர் கடந்த 5 நாட்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தாகவும் பிரதேசத்திலுள்ள தனியார் மருந்தகம் ஒன்றில் சிகிச்சை பெற்றதாகவும் தெரியவருகிறது.தனியார் மருந்தக வைத்தியர் வழங்கிய ஆலோசனைப்படி காய்ச்சல் குறையாத நிலையில், அரச வைத்தியசாலைக்கு உடனடியாகச் சென்றிருந்தால் இவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களாகக் குறைவடைந்தமையும் இதற்கு ஒரு காரணம் எனத் தெரிவிக்கும் பிரதேச பொதுமக்கள், மீண்டும் டெங்கு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் இடம்பெற உரிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அமைப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தேசிய தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் இணையத்தளத்திலுள்ள தரவுகளின் படி கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் இதுவரை 126 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

எண்ணிக்கையின் அடிப்படையில் வடக்கில் கிளிநொச்சி மாவட்டமானது 03ம் இடத்தில் உள்ளதாக அறியமுடிகிறது.

இதேவேளை இறந்த நபரது வதிவிடச் சூழலில் இதுவரை புகையூட்டல் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரியவருகிறது.

கடந்த காலங்களில் டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்ட பகுதிகளில் பரவலைத் தடுக்கும் நோக்குடன் உடனடியாகவே சுகாதரப் பகுதியினர் புகையூட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.