வடக்கின் கடல் வளத்தை சட்ட விரோத மீன்பிடி உபகரணங்களை கொண்டு பாதுகாப்பு தரப்பின் ஒத்துழைப்புடன் தென்னிலங்கை மீனவர் பெருந்தொகையில் வந்து அபகரிப்பதாக கூறி வடக்கில் மீனவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறார்கள்.

இது உடனடியாக கவனத்தில் எடுக்கப்பட்டு தீர்வு காணப்படாவிட்டால் இந்த சிக்கல் வடக்கு – தெற்கு மோதலாக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது. இதனாலேயே இதில் நான் தலையிடுகிறேன் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இன்று அமைச்சரவையில் எடுத்து கூறினார்.

இதையடுத்து ஜனாதிபதி, இது தொடர்பில் மீன்பிடி துறை அமைச்சர் விஜிதமுனி சொய்சாவை, உடனடியாக சம்பந்தப்பட்ட மீனவர் சங்க பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் உட்பட அனைத்து தரப்புகளையும் கூட்டி கலந்துரையாடுமாறு பணித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ கூறியதாவது,

அமைச்சரவையின் இன்றைய தினத்திற்கான பத்திரங்கள் ஆலோசிக்கப்பட்டு முடிவுற்ற பின், வடக்கின் மீனவர் பிரச்சினையை ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.

அப்போது இதில் தலையிட்ட மீன்பிடி துறை அமைச்சர் விஜிதமுனி சொய்சா, தெற்கில் இருந்து மீனவர்கள் வடக்கிற்கு பாரம்பரியமாக போய் வருவதாக கூறினார்.

வடக்கிற்கு வரும் அனைத்து தென்னிலங்கை மீனவர்களையும், வடக்கின் மீனவர்கள் வரவேண்டாம் என சொல்வதாக எனக்கு தெரியவில்லை.

ஆனால், பெருந்தொகையில் அங்கு சென்று, பெரும் படகுகளை பயன்படுத்தி வடக்கின் மீனவர்கள் செல்ல முடியாத கடலுக்குள் சென்று, கடலட்டை பிடிப்பில் ஈடுபட்டு அங்குள்ள கடல்வளத்தை தென்னிலங்கை மீனவர்கள் அபகரிப்பதாக கூறியே வடக்கின் மீனவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும், இதற்கு பாதுகாப்பு தரப்பின் ஒத்துழைப்பு இருப்பதாகவும் வடக்கின் மீனவர்கள் குற்றம் சாட்டுவதாக நான் கூறினேன்.

வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோருடன் தாம் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், வடக்கு, தெற்கு மீனவர் மத்தியில் ஏற்பட்டுள்ள உடன்பாட்டின்படியே தெற்கின் மீனவர்கள், வடக்குக்கு போவதாகவும் மீன்பிடி துறை அமைச்சர் விஜிதமுனி சொய்சா பதில் கூறினார்.

இந்நிலையில் விவாதத்தில் குறுக்கிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, யுத்த காலத்தில் வடக்கின் மீனவர் கடலுக்கு போகவில்லை. அதை பயன்படுத்திக்கொண்டு, தெற்கின் மீனவர்கள் பெரும் அளவில் வடக்குக்கு செல்ல முற்பட்டுள்ளார்கள். இன்று யுத்தம் முடிந்த நிலையில் அவர்களுக்கு அவர்களின் கடலில் தொழில் செய்ய இடமளிக்கப்பட்ட வேண்டும் என்று கூறினார்.