சுமார் 5 ஆயிரம் கோடி மதிப்புள்ள சீனப் பொருள்கள் மீது அமெரிக்காவில் 25 சதவீதம் வரி விதிக்க உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
சீனா அறிவுச் சொத்துரிமை திருட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியே இந்த வரிவிதிப்புக்கு உத்தரவிட்டுள்ளது அமெரிக்கா. 800 வகையான பொருள்களை குறிவைத்து செய்யப்பட்டுள்ள இந்த வரிவிதிப்பு ஜூலை 6 முதல் செயல்பாட்டுக்கு வரும். சீனா இந்த நடவடிக்கைக்கு பதில் நடவடிக்கை எடுத்தால், மேலும் அதிக வரிவிதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் மாளிகையில் இருந்து வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இதற்குப் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனா கூறிவிட்டது. இதனால், உலகின் இரண்டு பெரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகள் இடையே வணிகப் போர் மூளுமோ என்று பலரும் அஞ்சுகின்றனர்.
மேலும் அதிக அமெரிக்கத் தொழில் நுட்பமும், அறிவுச் சொத்தும் நியாயமற்ற வணிக நடைமுறைகள் மூலம் சீனாவுக்குச் செல்வதைத் தடுக்க இந்த நடவடிக்கை அவசியம் என்று கூறியுள்ள டிரம்ப். இது அமெரிக்காவின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் தயாராகும் விமான டயர்களில் இருந்து பாத்திரம் துலக்கும் இயந்திரம் வரை பல விதமான பொருள்களும் அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைக்கு இலக்காகியுள்ளன.
தங்களது உயர் தொழில் நுட்பத் தொழில்கள் மேலாதிக்கம் செலுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு “மேட் இன் சீனா 2025” என்ற திட்டத்தை சீனா வகுத்துள்ளது. இந்த திட்டம் அமெரிக்கா மற்றும் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும். இத்திட்டத்தை வீழ்த்தும் நோக்கத்துடனே இந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார் அதிபர் டிரம்ப்.
சீன சந்தையில் விற்பனை செய்ய அனுமதி பெறுவதற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் உரிமைத்துவத்தை சீன நிறுவனங்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள், நடைமுறைகள் தொழில் நுட்பமம், அறிவுச் சொத்துகளும் சீனாவுக்கு இடம் பெயர்வதாகக் கூறி இத்தகைய நடைமுறைகளை சீனா நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது